சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் பலி, எட்டு பேர் காயம்


சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தாக்குதலையடுத்து விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து புறப்பட வேண்டிய சில விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டதாக விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையத்தளம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்துக்கு ஏற்பட்ட பொருள் சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படாத நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இதற்குப் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையில், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து பகுதியளவிலான வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.

மேலும், சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையமொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலை சவூதி படையினர் இடைமறித்துள்ளனர். எனினும், இடைமறிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தின் சிதறிய பாகங்கள் விழுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக சவூதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சமீபத்திய வாரங்களில் சவூதி அரேபியாவுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்குவைக்கப்படுவதால், உயிரிழப்புகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் தடைகள் அதிகரித்து வருகின்றன என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments